பேருந்து விபத்துக்கள் மலேசியாவில் தொடர்கதை

மலேசியாவில் சாலை வசதிகள் பெருகப் பெருக வாகன எண்ணிக்கைகளும் பெருகிக் கொண்டே வருகின்றன. நம் நாட்டில் வாகன எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இல்லை. வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் வேளையில் விபத்துக்களும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. விபத்துகளினால் சொத்து இழப்பு ஒரு புறமிருக்க உயிர்ச்சேதங்களும் அநியாயமாக உயர்ந்து வருகின்றன.

எந்த நாட்டிலும் பொதுப்போக்குவரத்து சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். பொதுப்போக்குவரத்து வானனங்களில் பேருந்து சேவைமிக முக்கியம். விரைவு பேருந்துகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகளையும் சாலைப்போக்குவரத்து நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. பேருந்து விபத்துக்கள் நம் நாட்டினைப் போல் வேறெங்கும் அடிக்கடி நிகழ்வதில்லை. மனித உயிர்கள் இங்கு அற்பமாக போய் விட்டது. பேருந்து விபத்துக்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.

2009 டிசம்பர் 26-ஆம் தேதி சானி எக்ஸ்பிரஸ் என்ற பேருந்து ஈப்போ அருகே தடுப்புக் கம்பியை தகர்த்து மோதியதில் 10 பேர் பலியானார்கள். மறுநாள் பத்திரிகையில் பஸ் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்ற செய்தி வந்தது. அதன் பின்னர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 223 - ஆவது கிலோ மீட்டரில் அக்டோ பர் 10-ஆம் தேதி ரெம்பாவ் அருகே டெலிமா எக்ஸ்பிரஸ் பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து மற்றும் கார்களில் பயணம் செய்தவர்களில் 13 பேர் மரணம் அடைந்தனர்.

நேற்று கெந்திங் மலையில் இருந்து 44 இளைஞர்களுடன் இறங்கிக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் புரண்டு விழுந்ததில் ஏழுபேர் இறந்து விட்டனர் 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எல்லா பேருந்து விபத்துகளை பற்றி குறிப்பிடும்போதும் "கட்டுப்பாட்டை இழந்து" விபத்துக்குள்ளானது என்று விவரிக்கப்படுகிறது. எந்த ஒரு வாகனமும் அதிவேகமாகச் சென்றால்தான் கட்டுப்பாடை இழக்க முடியும். பேருந்துகள் எல்லாம் கொல்லும் இயந்திரமாக நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பேருந்துகளுக்கும் கனரக வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்தும் நடவடிக்கையை அரசு அவசரமாக அமல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அப்பாவி உயிர்களை காக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு, சுகாதார சுற்றுச் சூழல் விதி பற்றிய கருத்தரங்கு ஆகியவை குறித்து மாநாடு போட்டது போதும். உடனடியாக போக்குவரத்து நிறுவனங்கள் என்னென்ன விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகளை வரையறுக்க வேண்டும்.

பேருந்து விபத்துகள் நேராமல் இருக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹோங் சூ ஹா எடுக்க வேண்டும். மலேசிய சாலைப் பாதுகாப்புக் கழகம், சாலைப்போக்குவரத்து அனுமதி வாரியம், புஷ்பாகோம் போன்ற அமைப்புகள் மனித உயிர்களை துச்சமாக எண்ணாமல் கடுமையான சட்ட விதிகளை வகுத்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அங்கீகரிக்க ஆவன செய்ய வேண்டும்.

செய்வார்களா.. இல்லை... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெறும் அரிக்கைகளை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு மாநாடுகளில் கலந்து கொள்ள சென்றுவிடுவார்களா...?

No Response to “பேருந்து விபத்துக்கள் மலேசியாவில் தொடர்கதை”

Leave a Reply

Thanesh_Darmaraja. Powered by Blogger.